`அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி!’ - சிங்கப்பூர் குடிமகன் கைதால் பரபரப்பு:
சீனாவுக்கு உளவு பார்த்ததாகக் கூறி சிங்கப்பூர் குடிமகனை அமெரிக்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதாரம், அணு ஆயுதம் போன்ற அனைத்து விஷயங்களிலும் முரண்பாடு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, கொரோனா வெடித்ததிலிருந்து இந்த முரண்பாடு மேலும் அதிகரித்து கருத்து சண்டை உருவாகியுள்ளது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதைவிட பெரும் பிரச்னையாக சீனாவின் உளவாளி ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனாவின் தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சீனாவின் செங்டு நகரில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை மூடுமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. ‘தங்கள் மீதான நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்கு இது தேவையான பதிலடிதான்’ என சீனா கருத்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்தான் சீனாவுக்காக உளவுபார்த்ததாக சிங்கப்பூர் குடிமகன் ஜூன் வீ இயோ என்ற நபரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள தனது அரசியல் ஆலோசனை மையம் மூலம் சீன உளவு அமைப்புகளுக்காகத் தகவல்களைத் திரட்டினார் என்று குற்றம்சாட்டும் அவர்கள், சீன ராணுவத்துடன் தொடர்புடைய மற்றொரு ஆய்வு மாணவியையும் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா
“சந்தேகத்துக்கு இடமில்லாமல் அமெரிக்காவிலிருந்து முக்கியமான தகவல்களை பெருவதற்கு சீன அரசு ஒரு நபரை நியமித்து தன் கைவரிசையைக் காட்டியுள்ளது. சீன அரசாங்கத்துக்கு ஆர்வமுள்ள அமெரிக்கர்களைக் கவர்ந்திழுக்கத் தொழில் நெட்வொர்க்கிங் தளங்கள் மற்றும் தவறான ஆலோசனை நிறுவனத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு இயோ மையமாக இருந்துள்ளார். அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையைச் சீனா திருட முயல்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ எனச் சீனாவை கடுமையாக விமர்சித்துள்ளது அமெரிக்கா.