விவாதத்தை ஏற்படுத்தும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி..! கேள்வி எழுப்பும் உலக சுகாதார அமைப்பு:
ஜெனீவா: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு தரவுகள் ஆராயப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
200 நாடுகளில் இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வர மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் களம் இறங்கி உள்ளன.
அவற்றில் முக்கிய நாடான ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக நேற்று அறிவித்து விட்டது. அதன் அறிவிப்பு உலக நாடுகள் இடையே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தினாலும் அது எப்படி சாத்தியம் என்ற கேள்விகளும் எழ ஆரம்பித்துள்ளன.
இது குறித்து, ரஷ்யநாட்டு பிரதமர் புடின் கூறியிருப்பதாவது: தங்களின் ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துவிட்டனர். 2 மாதங்களுக்குள் மனிதர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. எனது மகளுக்கும் இந்த ஊசி செலுத்தப்பட்டது.
அவர் நலமாக உள்ளார். இறுதி பரிசோதனையில் 1000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதாரத்துறையினர் ஒப்புதல் அளித்து விட்டனர் என்று தெரிவித்தார்.
ஆனால், இப்போது, ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி, அதன் பயன்பாட்டு முறைகள், சோதனை தரவுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும், அதன் பிறகு தான் இறுதி முடிவை அறிவிக்க முடியும் என்ற உலக சுகாதார அமைப்பு கேள்வி கூறி உள்ளது.