சர்வதேச யானைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாட்டம்!: காடுகளின் காவலனை காப்போம்..யானைகளை வாழ வைப்போம்!
சென்னை: சர்வதேச யானைகள் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. காடு வளத்திற்கு ஆதாரமாக திகழும் யானைகளை பாதுக்காக்க அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். பூமியில் வசிக்கும் விலங்குகளிலேயே மிகப்பெரிய ஒன்றாக யானை திகழ்கிறது. அதற்கேற்ப காடு வளத்திற்கான அதன் பணிகளும் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. உலகின் சில நாடுகளில் மட்டுமே இன்னமும் யானைகள் இனம் காப்பாற்றப்பட்டு ஒரு ஆரோகியமான சூழல் இருந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. தமிழகத்தில் பறந்து விரிந்து காணப்படும் சத்தியமங்கலம் வனச்சரணாலயத்தில் யானைகளை அதிகம் காணமுடிகிறது. இதேபோல் பிற வனச்சரணாலயங்களிலும் யானைகள் அதிகளவில் உள்ளன. ஒரு காட்டில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கையை பொறுத்தே அந்த காட்டின் வளம் இருக்கும் என உயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 200 கிலோ உணவை யானைகள் உட்கொள்ளுவதால் அதன் சாணத்தில் வெளிப்படும் விதைகள் மூலம், ஒவ்வொரு ஆண்டும் பலநூறு மரக்கன்றுகளை நடும் பணியை மறைமுகமாகவே இந்த ஐந்தறிவு ஜீவன் செய்து முடிக்கிறது.
இதனால் ஒரு வனத்தில் 10 யானைகள் இருந்தாலே அது மிகப்பெரிய காடாக உருவெடுத்துவிடும். சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு ஆண்டு முழுவதும் 900 முதல் 1200 யானைகள் வரை வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. மனிதனை போல் யானைகளும் சுமார் 80 ஆண்டுகள் வரை ஆயுள் தன்மை கொண்டதாகும். மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த யானைகளால் ஓட முடியும். இதேபோல் தண்ணீர் இருக்கும் பகுதியை 5 கிலோ மீட்டருக்கு முன்பாகவே அறியும் மதிநுட்பம் யானைகளுக்கு மட்டுமே உள்ளது.
நாளொன்றுக்கு 7,500 லிட்டர் தண்ணீரை யானைகள் அருந்தும். அதிக உணவை உட்கொள்ளுவதால் அதிகபட்சம் 2 நாட்கள் தண்ணீர் அருந்தாவிட்டால் யானைகளுக்கு மரணம் நிச்சயம். இதன் காரணமாகவே தண்ணீர் தேடி இவை ஊருக்குள் வருவது அண்மை காலமாகவே அதிகரித்துள்ளது. மனிதனின் வாழ்வு வளம்பெற வனவளம் அவசியமாகிறது. காடு வளம் பெருக யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். எனவே யானைகளின் உயிரிழப்பை தடுப்பதோடு, அவற்றை போற்றி பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதை இந்நாளில் நாம் மனதில் கொள்வோம்.


Editor: 0










