இ.ஐ.ஏ-2020 வரைவு குறித்து 20 லட்சம் கருத்துகள்; ஆராய குழு அமைத்தது மத்திய அரசு:
புதுடில்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 குறித்து இதுவரை 20 லட்சம் கருத்துகள் வந்துள்ளதால் அதனை ஆராய மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ‛சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு' (இ.ஐ.ஏ) குறித்து ஆகஸ்ட் 11 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வழங்கலாம் என குறிப்பிட்டிருந்தது. இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்த அரசாங்கம் 'இலவச உரிமம்' வழங்குவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஆக.,11 உடன் முடிவடைந்த இந்த வரைவு அறிக்கை குறித்து 20 லட்சம் கருத்துகள் வந்துள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 வெளியிடப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை 20 லட்சம் கருத்துகள் வந்துள்ளதால். இதனை ஆராய்வதற்கு தேசிய சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் ஈடுபட இருக்கிறது. இதற்கு அம்மையத்தின் முன்னாள் இயக்குர் எஸ்.ஆர்.வாடே தலைமையில் குழு செயல்பட இருக்கிறது. இதுவரை வந்துள்ள சாதக பாதக அம்சங்களை இக்குழு ஆராய்ந்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.