Online வகுப்புகள் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறதா..?
பெற்றோர்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?
இந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வந்தாலும் பிள்ளைகளுக்கு இது புதுமையான விஷயம்தான்.
கொரோனா நெருக்கடியால் பள்ளிகள் இந்த வருடம் திறக்கப்படுமா என்பது சந்தேக நிலையில் உள்ளது. இருப்பினும் கல்வி தடைபடாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வந்தாலும் பிள்ளைகளுக்கு இது புதுமையான ஒரு விஷயம்தான்.
தற்போதைய கொரோனா சூழலால் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாத பிள்ளைகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளும், ஹோம் ஒர்க்குகள் கொடுப்பதும் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கலாம். அவ்வாறு இருக்கும் உங்கள் பிள்ளைக்கு மன ஆறுதலாக துணை நின்று உதவுவது உங்கள் கடமை.
பொறுமையாக இருங்கள் : அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, அதன் அட்டவணைக் குறித்து பொறுமையாக புரிய வையுங்கள். அவர்கள் சற்று பின் வாங்கினாலும் கோபப்படாமல் இருங்கள். எனவே என்ன செய்தாலும் அதை பெற்றோர்கள் பொறுமையாகக் கையாள வேண்டும்.
இடைவேளை : பள்ளிகளில் எப்படி இடைவேளைகளை சரியாக பின்பற்றுவார்களோ அதை வீட்டிலும் கற்றுக்கொடுங்கள். வீடு என்பதால் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கலாம். நீங்கள்தான் சுறுசுறுப்பும், உற்சாகமும் அளித்து ஒவ்வொரு ஆன்லைன் வகுப்புகளுக்கும் அமர வைக்க வேண்டும். குறிப்பாக மதிய உணவுக்குப் பின் அவர்களை ஆன்லைன் வகுப்பிற்கு தயார் படுத்துவதில்தான் உங்கள் திறமை உள்ளது.
உரையாடல் : அவர்களின் மனநிலையை வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கான சூழலை உருவாக்குங்கள். பயம் உண்டானால் மனதிற்குள்ளேயே வைத்து மன அழுத்தத்தை உண்டாக்கலாம். எனவே அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள். அதற்கு உரிய அறிவுரை வழங்கி சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
பள்ளியின் மறுவடிவம் : பள்ளியின் மறு வடிவமாக வீட்டை மாற்றிவிடாதீர்கள். குழந்தையின் வயதிற்கு ஏற்ப அவர்களின் வகுப்பு நேரத்தை அட்டவணைப்படுத்துங்கள். அதேபோல் தொடர்ந்து வகுப்புகளாக அல்லாமல் பொழுதுபோக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.
வீடியோ சாட் : வீட்டிலேயே இருப்பதால் நண்பர்களுடனான உரையாடல் குறைந்திருக்கலாம். எனவே அவர்களுடன் வீடியோ சாட் செய்ய அனுமதியுங்கள். அனுமதித்துவிட்டு அருகிலேயே அமராதீர்கள். அவர்களுக்கான தனிப்பட்ட நேரமாக ஒதுக்கிக்கொடுங்கள். இதனால் அவர்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும்.
பொழுதுபோக்கு நேரம் : இதுதான் அவர்களுக்கு பிடித்த நேரமாக இருக்கலாம். எனவே அவர்களுக்கு படிப்பு படிப்பு என்று இல்லாமல் Fun டைம் என நேரம் ஒதுக்கி அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது என இருங்கள்.