ஒரே ஆண்டில் 2-வது பெரிய விபத்து! - ஜெட்டா ரயில் நிலையத்தைப் பதறவைத்த தீ

47 Views
Editor: 0

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஹரமெயின் ரயில்நிலையம் அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்..

ஒரே ஆண்டில் 2-வது பெரிய விபத்து! - ஜெட்டா ரயில் நிலையத்தைப் பதறவைத்த தீ:

 

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஹரமெயின் ரயில்நிலையம் அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் அதிவேக ரயில் சேவையான ஹரமெயின் சேவை புனித நகரங்களான மெக்கா - மெதீனா இடையே ஜெட்டா மற்றும் கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி ஆகிய நகரங்கள் வழியாக சேவை வழங்கி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் வேகமான ரயில் சேவையாகக் கருதப்படும் இது, மணிக்கு 300 கி.மீ வரை அதிவேகமாக பயணிக்கக் கூடிய ரயில் சேவையை வழங்கி வருகிறது. இந்த ரயில் சேவையைக் கடந்த 2018ம் ஆண்டில் அரசர் சல்மான் பின் அப்துல் அசீஸ் தொடங்கி வைத்தார்.

ஜெட்டா தீ விபத்து

ஜெட்டா தீ விபத்து

 

450 கி.மீ தொலைவு கொண்ட ஹரமெயின் ரயில் பாதையில், மெக்கா, ஜெட்டா, கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையம், கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி மற்றும் மெதினா என 5 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இந்தநிலையில், ஜெட்டா ரயில்நிலையம் அருகில் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட கேபின்கள் இருந்த பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்தத் தீயை தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து நடந்த போது அந்த கேபின்களில் பணியாளர்கள் யாரும் இல்லாததால், இதனால் உயிரிழப்போ, யாரும் காயமோ அடையவில்லை என சவுதி அரேபிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

தீ விபத்து நடந்த ஜெட்டா ரயில் நிலையப் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 19-ல் இதேபோன்று பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஜெட்டா ரயில் நிலையம் கடுமையாகச் சேதமடைந்த நிலையில், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இரண்டரை மாதங்கள் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், கடந்த டிசம்பரில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்பின்னர் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது.

ஜெட்டா தீ விபத்து

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட தீ விபத்து குறித்து சவுதி அரேபிய அரசு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அஜ்மானின் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ, சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

 

உலகச்செய்திகள்