டிபி தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது.. ஜெர்மனியின் 3வது கட்ட ஆய்வில் நம்பிக்கை தகவல்:
டெல்லி: கோவிட் -19 நோய்ககு எதிரான தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், VPM1002 எனப்படும், காச நோய் (டிபி) தடுப்பூசி சிறப்பாக பங்களிப்பதாக, ஜெர்மனியில் நடக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் இந்த தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த மருந்து தொழில்நுட்பத்தை நமது நாட்டில் எளிதாக பயன்படுத்தலாம்.
பரிசோதனை
ஏனெனில், பயோடெக்னாலஜி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதன் டெவலப்பரான பெர்லினில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்ஃபெக்ஷன் பயாலஜி மற்றும் வக்ஸைன் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் (வி.பி.எம்) நிறுவனத்துடன் இந்த மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. வி.பி.எம் தலைமை நிர்வாகி லியாண்டர் க்ரோட் இதுபற்றி கூறுகையில், நாங்கள் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து, மனிதர்களிடம் இரண்டு- மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இரு கட்டங்கள்
ஒரு கட்ட பரிசோதனை சுகாதார பணியாளர்களிடமும் மற்றொரு சோதனை முதியோர்களிடமும் நடத்தப்படுகிறது. இரண்டு சோதனைகளும் ஜேர்மன் தேசிய அத்தாரிட்டியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்களில் 1,200 பேருக்கும், முதியோரில் 2,200 பேருக்கும், தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனைகள் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காச நோய்
இந்தியாவில் கோவிட் -19 பரவல் அதிமாக இருந்தாலும், வைரஸ் தொற்று காரணமான இறப்புகள் குறைவாகவே உள்ளன. காசநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுடன் நமது மக்கள் அதிகம் புழங்க நேரிட்ட சூழ்நிலை இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று லோக் நாயக் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வு
நாட்டின் மிகப்பெரிய கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் லோக் நாயக் மருத்துவமனையாகும். இதன் மருத்துவர்கள் சமீபத்தில் ஒரு சிறிய ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளை எச், ஏ மற்றும் எஸ் என மூன்று குழுக்களாகப் பிரித்தனர். குரூப் எச் மருத்துவமனையில் இருந்து 20 ஆரோக்கியமான சுகாதாரப் பணியாளர்களை கொண்டிருந்தது. அவர்கள் கோவிட்டால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான சான்று பெறப்பட்டது. குரூப் ஏ கோவிட்-பாசிட்டிவ் அறிக்கையுடனான, 20 அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறி கொண்டவர்களை அடங்கியது. குரூப் எஸ் என்பது, ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட 20 கடுமையான நோயுற்ற கொரோனா நோயாளிகளை கொண்டிருந்தது
காச நோயை தாங்கினால் ஓகே
குழு எஸ்-ல் உள்ள 20 பேரில் 14 (70%) பேர் நோய் காரணமாக இறந்துவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் காசநோய் பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பு இல்லாதவர்கள் என்று ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவர்கள் என்கிறார், ஆய்வுக்கு தலைமை வகித்தவரான, மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவ பேராசிரியர் டாக்டர் அஜய் குப்தா.
தப்பிக்கலாம்
காச நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உள்ளதாக சான்றிதழ் அளிக்கப்பட்டவர்களில், 6 பேரில், 5 நோயாளிகள் உயிர் பிழைத்தனர். அதேநேரம், 6வது நோயாளிக்கு டைபாய்டுக்கு எதிராக அதிக அளவு ஆன்டிபாடிகள் இருந்தன. குழு H மற்றும் Aல், 50% பேருக்கு காசநோயை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. எனவே காச நோயை எதிர்கொள்ள திறனுள்ளவர்களால் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் என்கிறது இந்த ஆய்வு. இருப்பினும், இது சிறிய அளவிலான ஆய்வு என்பதால், இது தொடர்பாக பெரிய அளவுக்கு ஆய்வுகள் அவசியப்படுகின்றன