ஆன்லைனில் ஆதார் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இனி ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் அறிவிப்பு:
டெல்லி: ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ள இனி 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தேசிய ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திருத்தங்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும் முகவரி திருத்தங்களுக்கு 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆதார் அட்டைக்கென்று தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் Unique Identification Authority of India ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் இந்த சேவையத்திற்கு சென்று ஆதார் அட்டையை பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள திருத்ததை மேற்கொள்ளலாம்.
திருத்தம் மேற்கொள்ள ஆதார் சேவை மையம் வசூலிக்கும் கட்டணம் ரூபாய் 30 ஆகும். இந்நிலையில் ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ள இனி 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆதார் தொடர்பான விவரங்களை மாற்றுவதற்கோ அல்லது புதிய தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கோ கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ஆதார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களை மாற்றுவதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பயோமெட்ரிக் இல்லாமல் முகவரி தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.