கொரோனா சிகிச்சை: அலோபதியை முந்தியது பாரம்பரிய மருத்துவம்!
புது டில்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் அலோபதி மருந்துகளை விட, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருந்துகள் அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவின் மருத்துவ சோதனை பதிவேட்டில், கொரோனா வைரஸ் மருந்து தொடர்பான 203 சோதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 125 சோதனைகள் (61.5%) ஆயுஷ் அமைச்சகத்துடன் தொடர்புடையவை. 64 சோதனைகள் (30.7%) அலோபதி மருந்துகள் சம்பந்த்தப்பட்டவை. ஜோத்பூர் எய்ம்சின் ஆய்வில் இந்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
குளோரோகுயின், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற ஒற்றை மருந்து சிகிச்சை தொடர்பான 12 பரிசோதனைகளும், பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான 10 பரிசோதனைகளும், இடோலிசுமாப் (Itolizumab) என்ற நோய் எதிர்ப்பு மருந்து தொடர்பான 6 பரிசோதனைகளும், பாவிபாவிர் (Favipavir) மருந்து தொடர்பான 2 பரிசோதனைகளும் அலோபதி முறையில் செயலில் உள்ளன. ஆயுஷ் அமைப்பில் ஆயுர்வேத மருந்துகள் 69.6%, அதைத் தொடர்ந்து ஹோமியோபதி மருந்துகள் 12%, சித்தா மருந்துகள் 11.2%, ஆர்சனிகம் ஆல்பம், அஸ்வகந்தா, ஆயுஷ் 64, சீந்தில் ஆகியவை பரிசோதனை செய்யப்படுகின்றன.
இது பற்றி ஜோத்பூர் எய்ம்சின் மருந்தியல் ஆய்வாளர் ஜெய்கரண் சரன் கூறியதாவது:
எங்கள் ஆய்வுகளின் மூலம் ஆயுஷ் அமைச்சகம், பாரம்பரிய மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியை ஊக்குவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது தெரிகிறது. அலோபதி மற்றும் ஆயுஷ் அமைப்பினர் முதல் முறையாக இணைந்து பணியாற்றுவது, இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால ஒருங்கிணைப்புக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.
நெல்லி, அஷ்வகந்தா, சீந்தில் போன்ற பல ஆயுர்வேத தயாரிப்புகள் நோயெதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இந்த தயாரிப்புகள் பல ஆண்டுகளாக நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பாதுகாப்பானவை என்பதும் பதிவாகியுள்ளது. அவை அனைத்தும் இந்த சோதனைகளில் ஆராயப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.