'யார் எதைச் சொல்லி டிரம்பை சாடலாம்': திட்டமிடும் ஜனநாயகக் கட்சி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பிடன் ஆகியோரது விமர்சனங்களை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை விமர்சித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது பிடன் மற்றும் டிரம்ப் ஆகியோரது மோதலை காட்டிலும் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோரது மோதலே அதிகரித்துள்ளது. இவர்களது வார்த்தைப் போர் உச்சத்தை எட்டியுள்ளது.
'கமலா ஹாரிசுக்கு துணை அதிபர் வேட்பாளராக சட்டப்படி இடமில்லை' என, டிரம்ப் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கமலா ஹாரிஸ், 'டிரம்ப் அமெரிக்காவில் கோவிட்-19 நிலைமையை சரியாக கையாளவில்லை' என, விமர்சித்திருந்தார். கொதித்தெழுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கமலாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பினார்.
இந்நிலையில், இன்று பிரச்சாரத்தில் உரையாற்றிய கமலா ஹாரிஸ் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மேலும், 'டிரம்ப் ஆட்சியில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக எத்தனை வன்கொடுமைகள் நடந்தது என்பதை நினைவு கூறுங்கள்' என்றார்.
தற்போது அமெரிக்காவில் 60 லட்சம் கோடி மக்களை தாக்கியுள்ளது கொரோனா. 1.80 லட்சம் பேர் இதனால் மரணமடைந்துள்ளனர். கொரோனா விவகாரத்தில் டிரம்பின் அஜாக்கிரதை குறித்து ஜோ பிடனும், கறுப்பின ஒடுக்குமுறை குறித்து கமலாவும் டிரம்பை தனித்தனியாக சாடி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
'யார் எதைப் பற்றி பேசினால் வாக்குகளை சேகரிக்க முடியும் என குடியரசு கட்சி நன்றாக அறிந்து உள்ளது. அதனாலேயே இந்த உத்தியை கையாள்கிறது' என, அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.