உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கின்ற நிலையில் உக்ரைன் மீது நேற்று (17) திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 “ட்ரோன்”கள் வீசப்பட்டதல், உக்ரைன் மக்கள் அச்சத்தில் உறைந்டுள்ளனர்.
தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான வொலைன், மைகொலைவ், ஜபோரிச்சியா, துறைமுக நகரமான ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அங்குள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களால், மூன்று பிராந்தியங்களில் மின்தடை ஏற்பட்டது.
இது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், “ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெத் வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா இந்த தாக்குதலில் பயன்படுத்தியுள்ளது.
இதில், 100க்கும் மேற்பட்டவை வானிலேயே அழிக்கப்பட்டன. மைகொலைவ் நகரில் இருவரும், ஒடேசா பகுதியில் இருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்.