சந்திரயான் 2 பிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை - சென்னை பொறியாளர் கண்டுபிடிப்பு:
நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை என சென்னையைச் சேர்ந்த பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. இதில் இருந்து விக்ரம் லேண்டரையும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் கருவியையும் தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான சண்முக சுப்பிரமணியன், நாசா எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து, விக்ரம் லேண்டர் இருப்பிடம் குறித்த தகவலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இஸ்ரோவுக்கு தெரிவித்தார். இதை இஸ்ரோவும் உறுதி செய்தது.
இந்த நிலையில், தற்போது, பிரக்யான் ரோவர் இயந்திரம் செயல்பட்டதையும், அது இருக்கும் இடத்தையும் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்துள்ளார். நிலவுக்கு நாசா அனுப்பிய ஆர்பிட்டர் கருவி, கடந்த ஜனவரி மாதம் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர் கருவி உடையாமல் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து 2 மீட்டர் ஆழத்தில் விக்ரம் லேண்டர் கிடப்பதாகவும், ரோவர் கருவி அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் கூறியுள்ளார். விக்ரம் லேண்டர் பிறப்பித்த உத்தரவின்படியே ரோவர் கருவி செயல்பட்டிருக்கலாம் என்றும், அதனாலேயே சில மீட்டர் தூரம் ரோவர் சென்றிருக்கலாம் என்றும் கூறியுள்ள சண்முக சுப்பிரமணியன், அந்த தகவலை விக்ரம் லேண்டரால் பூமிக்கு அனுப்ப இயலாமல் போயிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் இஸ்ரோவுக்கும் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நாசாவிடம் இருந்து இதுபோன்ற தகவல்கள் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், மென்பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மென்பொறியாளர் கூறுவது உண்மையாக இருக்கலாம் என ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பிரக்யான் ரோவர் தானாக நகர்ந்திருந்தால் அதுவே வெற்றிதான் எனக் கூறியுள்ள அவர், சந்திரயான் 3 ஆராய்ச்சிக்கு இது பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.