சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை

146 Views
Editor: 0

சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்..

சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் நடந்த சம்பவம் பற்றி பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு:- 

“எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர் அறிமுகமானார். எனது பெற்றோர்கள், அன்வர் பெற்றோர் சகோதரி, சகோதரி மகள் எல்லோரிடமும் பேசினோம். எங்கள் வீட்டுக்கும் வந்தனர். அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர்களை பற்றிய விவரங்களை துருவி துருவி கேட்டதும் பதில் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர்.
அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டார்கள். பணம் கொடுக்க மறுத்ததும் மிரட்டினார்கள். வீட்டில் இருந்து வெளியே வரும்போது பார்த்துக்கொள்கிறோம் என்று எச்சரித்தனர். பெரிய நடிகை என்று நினைத்து விட்டாயா. மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாய் இல்லையா? பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

  என்னைபோல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. சினிமா அழகியலான உலகம். பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள்.” இவ்வாறு பூர்ணா கூறினார்.

மாநிலச்செய்திகள்