சிகரெட் குடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தும் சுடுநீர்
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை நன்கு உணர்ந்திருந்தாலும் அதனை கைவிடமுடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பதற்குத்தான் அவர்களின் மனம் அலைபாயும். புகைப்பிடித்தால்தான் அன்றைய நாளை உற்சாகமாக தொடங்கமுடியும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். காலை நேரத்தில் புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்தாலே புகைப்பழக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துவிடலாம். புகைப்பழக்கத்தை மறப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* மனித உடலில் 60 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. உடலுக்கு எப்போதும் போதுமான அளவு திரவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் தூங்கிவிட்டு எழும்போது காலையில் திரவத்தின் அளவு குறைவாக இருக்கும். அது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி கவனம் செலுத்தும் திறனை குறைக்கும். காலையில் எழுந்ததுமே சிகரெட் குடிக்கும் எண்ணம் மேலோங்கும். அதனை கட்டுப்படுத்தி, மிதமான சுடுநீர் பருகலாம். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். அதனை அன்றாட வழக்கமாக மாற்றவேண்டும். அது புகைப்பிடிக்கும் ஆர்வத்தை குறைக்க உதவும்.
* காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சியோ, நீச்சல் பயிற்சியோ மேற்கொள்ளலாம். அப்போது உடல் இயக்க திறன் அதிகரிக்கும். உடலையும் இலகுவாக்கும். உடற்பயிற்சியை தினசரி தொடரும்போது உடல் கட்டுக்கோப்பாக மாறத்தொடங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிக்கோட்டின் வீரியத்தை குறைக்க உதவும்.
* புகைப்பிடிக்கும் நபரை பார்க்கும்போதோ, வழக்கமாக புகைப்பிடிக்கும் நேரத்தை நெருங்கும்போதோ புகைப்பிடிக்கும் ஆவல் மேலோங்கும். அப்போது கண்களை மூடிக்கொண்டு மெதுவாக மூச்சு விடுங்கள். சிறிது நேரம் மூச்சு பயிற்சியை தொடரலாம். ‘இனி ஒருபோதும் புகைப்பிடிக்க மாட்டேன்’ என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக பதியச் செய்யலாம்.
* ஒவ்வொரு முறையும் புகைப்பிடிக்கும் ஆசை வெளிப்படும்போதெல்லாம் புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதற்கான அனைத்து காரணங் களையும் நினைவூட்டுங்கள். காலை யில் எழுந்ததும் கண்ணில் படும் இடமெல்லாம் ‘நான் வலிமையானவன்’, ‘புகைப்பழக்கத்தை மீண்டும் தொடரமாட்டேன்’ என்பது போன்ற வாசகங் களை பதியவையுங்கள். சாப்பிடும் அறை, குளியல் அறை, குளிர்சாதனப்பெட்டி, அதிகமாக பயன்படுத்தும் அறைகளில் புகைப்பிடிக்க தடை போடும் லோகோ பதித்த ஸ்டிக்கரை ஒட்டிவைக்கலாம்.
* காலையில் எழுந்ததும் செய்யும் வழக்கமான நடைமுறையை மாற்றி பாருங்கள். வழக்கத்தை மாற்றுவது புகைப்பழக்கத்தை தவிர மற்ற விஷயங்களை பற்றி சிந்திக்க உதவும். மேலும் புகைப்பிடிக்க தூண்டும் ஆவலை குறைக்கும். வழக்கமாக காலையில் காபி பருகுவது, சிற்றுண்டி ருசிப்பது, சிகரெட் புகைப்பது என்று பழகி இருந்தால் அதற்கு பதிலாக ஆரஞ்சு சாறு பருகலாம், முட்டையுடன் சிற்றுண்டி சாப்பிட பழகலாம். சாப்பிடும் இடத்தையும் மாற்றிவிடலாம்.
* வாகனம் ஓட்டும்போது புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றினால் இசை மீது கவனம் செலுத்தலாம். அது மனதை நிதானப்படுத்த உதவும்.
* ஒவ்வொரு முறையும் சிகரெட்டை புறக்கணிக்கும்போதெல்லாம் உங்களை பற்றி நீங்களே பெருமிதமாக பேசுங்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்காக ஒவ்வொரு முறையும் இலக்கை நிர்ணயுங்கள். அந்த இலக்கை எட்டும்போதெல்லாம் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து சில நாட்களாக புகைப்பழக்கம் பற்றிய சிந்தனை எழாமல் இருந்தால் நண்பர்களை அழைத்து விருந்து கொடுங்கள். புகைப்பிடிக்க நினைத்தாலும் நண்பர்கள் நினைவுக்கு வந்து போவார்கள். அவர்களும் புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு பக்கப்பலமாக இருப்பார்கள்.