சித்த மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே!
சாலிகிராமம் ஜவஹர் இன்ஜினியரிங் கல்லுாரியில், சித்த மருத்துவர் வீரபாபு, மூலிகை கஷாயம் வழியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 3,500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். 'எல்லாரும் தள்ளி நின்று பார்க்கும் போது, கிட்ட வந்து தொட்டு பார்த்து பரிசோதிக்கும் வீரபாபு, கண்ணுக்கு சாமியாகவே தெரிகிறார். அவரை கும்பிட தோணுது' என, குணமடைந்து வீடு திரும்பும், அத்தனை பேரும் சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது.
'ஆனாலும், டபிள்யு.எச்.ஓ.,வும், இந்தியாவின், ஐ.சி.எம்.ஆரும், சித்த மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் இன்னும் கொடுக்கவில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் சூரி அறிக்கை
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பங்கள், கொரோனாவுக்கு பின், வாழ்வாதாரம் இன்றி, மிகவும் வறிய நிலையில் உள்ளன. அவர்களை காப்பாற்ற, தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'உண்மை தான். கைத்தறியை நம்பி இருந்த அவர்கள், கடந்த ஆறு மாதங்களாக சொல்லொண்ணா துயரம் அனுபவிக்கின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, உலக நாடுகள், கல்விக் கட்டணத்தை குறைக்க பரிசீலித்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், கட்டாய வசூலிப்பில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது; இது, மனிதாபிமானம் அற்ற செயல்.
'தமிழகத்தின் கல்வித்துறை, பெரும்பாலும் அரசியல் சார்ந்த கல்வித் தந்தையர் கையில் தான் உள்ளது. அதனால் தான் இந்த சிக்கலோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை
இலங்கை தேர்தலுக்கு பின், ராஜபக்சே தலைமையில் அமைந்துள்ள அரசால், இலங்கை தமிழர்கள் பெற்ற உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பறிப்பதற்கு, மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அண்டை நாடான இந்தியாவிற்கு இருக்கிறது. இதில் பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
'அப்போ, பிரதமர் மோடியை இலங்கைக்கு அனுப்பி, ராஜபக்சே அரசு என்ன செய்கிறது என, கவனித்துக் கொண்டிருக்க செய்வோமா...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவியை கொடியேற்ற விடாமல் தடுத்தது பயங்கரவாதிகளா; இல்லையே! தேச விரோதிகளை அடையாளம் காட்ட துணிவில்லாமல், கூச்சல் போடுவது தான், திராவிட - தலித் பித்தலாட்ட அரசியல்.
'அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் உள்ளீர்கள். இவர்களின் பித்தலாட்ட அரசியலை புட்டு புட்டு வைக்கிறீர்களே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் இளைஞர் அணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை
கொரோனா ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., - எம்.பி., செந்திலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிறகு, கொரோனாவை ஒழிக்க, தி.மு.க., என்ன யோசனை சொன்னது எனக் கேட்பது, வழக்கமாக போய் விட்டது. அந்த பகுதி, மக்கள் பிரதிநிதியை அனுமதிக்காமல் நடந்த அரசு விழா, கூவத்துார் குலுக்கல் போட்டி அல்ல என்பதை முதல்வர் உணர வேண்டும்.
'தி.மு.க.,விடம் உள்ள அரிய, பெரிய விஷயங்களை, அறிக்கையாக தயாரித்து, முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பலாமே; முதல்வர் கூட்டத்தில் தான் பேச முடியுமோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை