இந்தியா-சீனா மோதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாதுகாப்புத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ராணுவத் தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோரை சந்தித்து லடாக்கில் உள்ள எல்லை நிலைமை குறித்து விவாதித்தார்.
லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள எல்லைக் கோட்டில் சீனத் தரப்பிலிருந்து எந்தவிதமான விரிவாக்கமும் ஏற்படவில்லை என்ற தகவல்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, லடாக்கில் கண் வைத்திருப்பவர்களுக்கு இந்தியா ஒரு பொருத்தமான பதிலை அளித்துள்ளது என்று கூறியதோடு, நாடு நட்பின் உணர்வை மதிக்கும் அதே வேளையில் ஆக்கிரமிக்க நினைக்கும் எதிரிக்கு தகுந்த பதிலை அளிக்கும் திறனும் உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த வார தொடக்கத்தில் இராணுவத் தளபதி கிழக்கு லடாக்கிற்கு வருகை தந்தார். எல்லைக்கு அருகிலுள்ள இந்திய நிலைகளை அவர் பார்வையிட்டார். ஜூன் 15-16 தேதிகளில் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து எல்லையில் இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சர் தொடர்ந்து தளபதி மட்டத்தில் விவாதம் நடத்தி வருகிறார்.
விமானப் படை தளபதி மார்ஷல் ஆர்.கே.எஸ். பதோரியாவும் சமீபத்தில் லே மற்றும் ஸ்ரீநகருக்கு விஜயம் செய்திருந்தார்.
அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை இராணுவம் எல்லைக்கு அனுப்பியுள்ளது. இந்திய விமானப்படை தனது சுகோய் 30, எம்.கே.ஐ, ஜாகுவார், மிராஜ் 2000 விமானம் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை லடாக் உள்ளிட்ட முக்கிய விமான தளங்களில் நகர்த்தியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவும் ஜப்பானும் இந்தியப் பெருங்கடலில் கூட்டு போர்பயிற்சியை மேற்கொண்டது.
Tags: எல்லை நிலவரம், பாதுகாப்புத் தளபதி, ராணுவத் தளபதி, ராஜ்நாத் சிங்