12ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

62 Views
Editor: 0

12ம் வகுப்பு இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்..

12ம் வகுப்பு இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதன்படி மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல மாணவர்கள் இறுதிநாள் தேர்வை தவறிவிட்டதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் தவறவிட்ட தேர்வுகள் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ அல்லது www.dge.tn.gov.in என்கிற இணையதளப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படவுள்ளது. அதேபோல நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் தனி தேர்வு அறைகளில் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அரசு செய்து தரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வை 30,000 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாக தெரிவித்திருந்தது. இதில் கணிசமான மாணவர்கள் தனித்தேர்வர்கள் ஆவர். இந்த நிலையில் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வை 786 மாணவர்கள் மட்டும் எழுத விருப்பம் தெரிவித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாநிலச்செய்திகள்