சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக செல்போனில் பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் ஒன்றினை அளித்திருந்தார்.
அதில் மண்ணடியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னார்வலர் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும், அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்போனில் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் புகார் அளித்திருந்தார். அது தொடர்பான ஆடியோவையும் போலீசாரிடம் சமர்பித்திருந்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உதவி பொறியாளர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் ஆடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை செய்த எஸ்பிளனேடு அனைத்து மகளிர் போலீசார் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அயனாவரத்தில் வசித்து வரும் கமலக்கண்ணனை கைது செய்ய போலீசார் சென்றபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள உதவி பொறியாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவியை ஆபாசமாக பேசிய விவகாரம்
பதிவு: ஜூலை 10, 2020 1:51 103 Views
உதவி பொறியாளர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.