கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள், பொருளாதார மற்றும் தொழில் துறை வல்லுநர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பேசி, முதலமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கையாக, பொருளாதார இழப்பை சமாளிக்கும் வகையில், மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல, ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்
பொருட்களை கொண்டுசெல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணி நாட்களை, ஆண்டுக்கு 250 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா நெருக்கடி தீரும் வரை, ஜிஎஸ்டி வரியிலிருந்து மாநிலங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேபோல தொலைநோக்கு நடவடிக்கையாக, அனைவரையும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதுடன், தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளையும் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.