சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களின் மீது ஆணி அடித்து பல தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைக்கின்றனர். மேலும், மின்சார வயர்கள், டியூப் லைட், சீரியல் லைட் போன்றவையும் மரங்கள் மீது வைக்கப்படுகிறது. இது போன்று சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் மின்சார சாதனங்களை அகற்ற உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஜெயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மரங்கள் மீது இது போன்று விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கபடுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியிடம் கொடுத்த மனு மீது இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாலையோர மரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னையில் மரங்களை சேதப்படுத்திய தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மனுதாரர் 6 வாரத்திற்குள் மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் எனவும் அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.