தமிழகத்தில் கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 7,99,717 பேர் பதிவு செய்திருந்தனர். பள்ளி மாணவர்களாக 7,79,931 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவியர்கள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் அடங்குவர். பொதுப் பாடப்பிரிவில் 7,28,516 பேர் தேர்வு எழுதினர். தொழிற்பாடப்பிரிவில் 51,415 பேர் தேர்வு எழுதினர்.
முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:
dge.tn.gov.in
dge1.tn.nic.in
tnresults.nic.in
ஆகிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி விவரங்கள்:
* தேர்ச்சி பெற்றவர்கள் 92.3 சதவீதம்
* மாணவியர் 94.80 சதவீதம் தேர்ச்சி
* மாணவர்கள் 89.41 சதவீதம்
மாணவர்களை விட மாணவிகள் 5.39 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்த 7,127 மேல்நிலைப் பள்ளிகள் இருக்கும் சூழலில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 2,120 ஆகும். அரசுப் பள்ளிகள் 85.94 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள் 98.70 சதவீதமும், இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.81 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி:
* அறிவியல் - 93.64 சதவீதம்
* வணிகவியல் - 92.96 சதவீதம்
* கலைப் பிரிவு - 84.65 சதவீதம்
* தொழிற்பாடப்பிரிவு - 79.88 சதவீதம்
பாடங்களில் தேர்ச்சி சதவீதம்:
* இயற்பியல் - 95.94 சதவீதம்
* வேதியியல் - 95.82 சதவீதம்
* உயிரியல் - 96.14 சதவீதம்
* கணிதம் - 96.31 சதவீதம்
* தாவரவியல் - 93.95 சதவீதம்
* விலங்கியல் - 92.97 சதவீதம்
* கணினி அறிவியல் - 99.51 சதவீதம்
* வணிகவியல் - 95.65 சதவீதம்
* கணக்குப் பதிவியல் - 94.80 சதவீதம்
தமிழக அளவில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதையடுத்து ஈரோடு 96.99 சதவீதமும், கோயம்புத்தூர் 96.39 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாற்றுத் திறனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2835. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 2,506 பேர். 62 சிறைக் கைதிகள் தேர்வெழுதிய நிலையில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.