சென்னை: "முப்பாட்டன் முருகனை பழித்துரைத்து, இழிவுசெய்யும் நோக்கோடு வீடியோ வெளியாகி தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவுப் பரப்புரை எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகளை, அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சனம் என்ற பெயரில் வக்கிரத்தை உமிழ்ந்து, பெருவாரியான மக்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. அவர்களுக்குள் மதவுணர்ச்சியை மேலிடச்செய்து மதவாத இயக்கங்கள் வேரூன்றவே திராவிட ஆதரவாளர்களின் இத்தகையச் செயல்கள் உதவுகிறதே ஒழிய, தமிழுக்கும், தமிழர்க்கும் அணுவளவும் நலன் பயக்கவில்லை" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் விலாவரியாக தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:
"தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும்.
அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்கால தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதனடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகை திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கி போற்றுவதும் தமிழரின் மரபு..சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.
தமிழர்களின் பெருத்தப் பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும் பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில்,தமிழின முன்னோர்களை இழித்துரைத்துப் பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவும் கொண்டதாகும். ஆரியப்படையெடுப்பால் இடையில் நிகழ்ந்த கலப்பினால் அவையாவும் சிறுக சிறுக சிதைக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் திருடப்பட்டு, புனைந்து நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தனக்கென தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ,இறையியல் மரபுகளையோ கொண்டிராத ஆரியம் எல்லாவற்றையும் திருடிச்சேர்த்து, புழுகிப் புராணமாகவும், இதிகாசமாகவும் மாற்றி நிலைநிறுத்தி பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துப் பொதுப்புத்தியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.