திருப்பதி திருமலையில் 158 பேருக்கு கொரோனா:

49 Views
Editor: 0

திருப்பதி திருமலையில் 158 பேருக்கு கொரோனா: ஆந்திர அரசுக்கு அறிக்கை அனுப்பிய போலீசார் - மீண்டும் ரத்து செய்யப்படுமா தரிசனம்?.

திருப்பதி மலையில் பணியாற்றும் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தரிசனம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஆந்திரம் மாநிலம் திருப்பதி திருமலையில் தரிசனத்துக்கு சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளநிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

திருப்பதி மலையில் பணியாற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் 14 பேர், பாதுகாப்பு துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 4 பேர், அர்ச்சகர்கள், தீட்சதர்கள், சுவாமி வாகனத்தை சுமப்பவர்கள் ஆகிய 21 பேர், பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 27 பேர், கோவிலுக்குள் உள்ள பிரசாத விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் இரண்டு பேர், தேவஸ்தான சுகாதார துறையில் வேலை செய்யும் 8 பேர், அன்னதான கூடத்தில் பணியில் இருந்த மூன்று பேர், தேங்காய் விற்பனை செய்யும் கவுண்டரில் வேலை செய்யும் ஒருவர், தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா பக்தி சேனல், திருமலையில் உள்ள தகவல் ஒளிபரப்பு நிலையம் ஆகியவற்றில் வேலை செய்யும் மூன்று பேர், திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு நிலையத்தில் வேலை செய்யும் இரண்டு பேர், தேவஸ்தான குடிநீர் துறையில் வேலைபார்க்கும் 4 பேர், ஆந்திர மாநில சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 43 பேர், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் 6 பேர், சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 9 பேர், மின்சார துறையில் வேலை செய்யும் 2 பேர், உள்ளூர் போலீசார் 7 பேர் ஆகிய 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தற்போது ஏழுமலையான் கோவில் ஜீயர்கள் 2 பேரும் உள்ளனர்.

இந்தநிலையில் திருமலை போலீசார் ஆந்திர அரசுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கையில், முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலத்தில் திருப்பதி மலையில் ஒரே ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதன்பின் ஜூன் மாதம் எட்டாம் தேதி முதல் இரண்டு நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோருக்கும் அதன்பின் பதினொன்றாம் தேதி துவங்கி பக்தர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கப்பட்டது. முதலில் 3 ஆயிரம் டிக்கெட்டுகளை வழங்கிய தேவஸ்தான நிர்வாகம், அதன்பின் 12 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட அனுமதி அளித்தது. இதனால் ஆந்திராவில் இருந்து மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கொரோனா அறிகுறிகளுடன் காணப்படும் பக்தர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரித்து தேவஸ்தான நிர்வாகம் பரிசோதனைக்கு அனுப்புகிறது. பரிசோதனை முடிவுகள் வந்து சேர்வதற்குள் அந்த பக்தர்கள் சாமி கும்பிட்டு முடிந்து வீடு திரும்பி விடுகின்றனர். ஏழுமலையான் கோவில் பிரசாத தயாரிப்பு கூடத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் தயார் செய்யும் பிரசாதம் பக்தர்களுக்கு பங்கிடப்படுகிறது.

திருப்பதி மலையில் உள்ள அன்னதான சத்திரத்தில் சாப்பிடும்போது பக்தர்கள் முக கவசத்தை அகற்றிவிட்டு சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுகாதாரத்தை முழுமையாக பின்பற்றி பெரிய ஹோட்டல்கள் திருப்பதி மலையில் மூடப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்தை பின்பற்றாமல் இருக்கும் சிறிய ஓட்டல்கள் மட்டும் திறந்து உள்ளன. குடிநீர் பாட்டில்களுக்கு முழு அளவில் திருப்பதி மலையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொது குழாய்களில் அனைவரும் ஒரே இடத்தில் தண்ணீரை பிடித்து குடிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் திருப்பதி மலையில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.

இதற்குத் தீர்வாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது சாமி தரிசனத்திற்காக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை தற்காலிகமாக தேவஸ்தான நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். திருப்பதி மலையில் செயல்படும் சிறிய ஹோட்டல்களை தற்காலிகமாக மூடி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான உயரதிகாரிகளும் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டு ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தெரியவந்துள்ளது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாமி தரிசனம் அனுமதியை மீண்டும் நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தேவஸ்தானம் தள்ளப்படும்.

மாநிலச்செய்திகள்