சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோக முறை முதன்முறையாக இன்று தொடங்குகிறது.
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தொடக்கத்தில் சென்னையில் வேகம் எடுத்த கொரோனா, இப்போது மற்ற மாவட்டங்களையும் பதம் பார்த்து வருகிறது.
கொரோனா பள்ளி, கல்லூரி தேர்வுகளை கடுமையாக பாதித்தது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தாலும் அதன் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் இருந்தது.
இந் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், தேர்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரி படிப்பை தேர்வு செய்ய வேண்டிய தேவையில் உள்ளனர்.
ஆகையால், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கல்வித்துறை தொடங்கி இருக்கிறது. அதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு முறை கொண்டு வரப்படும் என்று அறிவித்தது.
அதன்படி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். அதற்கு ஏற்ப http://Tngasa.in என்ற இணைய தளத்தை தமிழக அரசு தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு இந்த இணையதளம் செயல்படுகிறது.