எந்த நேரத்திலும் மரணிக்கலாம் என்று தெரிந்தும் தன் மனக் குமுறலை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார், வடமாநில இளம்பெண் மாமுன்.
பிப்ரவரி 22-ம் தேதி இரவு 9 மணிக்கு, காட்பாடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஓர் இளம்பெண் நிர்வாணமாக நடந்து செல்வதாக சமூக நலத்துறைக்குத் தகவல் கிடைத்தது. பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் சமூக பணியாளர் சங்கரி தலைமையிலான அலுவலர்கள் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். நிர்வாண நிலையில் சுற்றிய இளம்பெண்ணை மீட்டு அங்கிருந்த பயணி கூடுதலாக வைத்திருந்த பேண்ட், சட்டையை அணியச் செய்தனர். அப்போது, அந்தப் பெண் உளவியல் ரீதியாக மன இறுக்கத்தில் இருந்தார்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னரே அந்தப் பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அவரின் பெயர் மாமுன். வயது 26 இருக்கும் என்றும் தெரியவந்தது. ரயிலில் பயணித்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சந்தேகித்தனர். அதையடுத்து பெண்ணின் பரிதாப நிலையை உணர்ந்து அரியூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில், கடந்த மே மாதம் ஒரு நாள் திடீரென அந்தப் பெண் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில், மூளை கட்டி (பிரெய்ன் டியூமர்) இருந்தது கண்டறியப்பட்டது. வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் உடனடியாக அறுவைசிகிச்சை செய்து அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்கான மருத்துவ ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், `ஆபத்தான கட்டத்தில் அந்தப் பெண் இருப்பதால், அறுவைசிகிச்சை செய்வது உயிருக்கே ஆபத்தாகக்கூட முடிந்துவிடும். இன்னும் ஓர் வாரத்தில் மரணம் நிச்சயம்’ என்று மருத்துவர்கள் கை விரித்துள்ளனர்.
மீண்டும் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். மருத்துவர்கள் கூறிய ஒரு வாரத்தையும் கடந்து ஒரு மாதத்துக்கும் மேலாக இருக்கிறார். இப்படியான சூழலில், அந்தப் பெண்ணின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமாக மாறியிருக்கிறது. மிகவும் அபாயக் கட்டத்தை நெருங்கிவிட்டார். அவரைக் காப்பாற்றுவதற்காக சமூக நலத்துறை அலுவலர்கள் மருத்துவர்களிடம் பேசினர். `எதுவும் செய்ய முடியாது’ என்று மீண்டும் மருத்துவர்கள் அதே பதிலைக் கூறியுள்ளனர். மரணத்தின் விளிம்பில் அந்தப் பெண் நிற்பது, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக நலத்துறையினர், ``இந்தச் சம்பவம், எங்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு கழுத்துக்குக் கீழ் பகுதி முழுவதும் நெருப்பில் வெந்த தழும்புகள் இருக்கின்றன. தமிழ்ப் புரியவில்லை. வடமொழியில் பேசுகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர் கிடையாது. சைகைகளால் தேவையானவற்றைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார். அந்தப் பெண் இளைஞர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்துள்ளார். திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தையும் பெற்றிருக்கிறார்.
அந்தக் குழந்தையை உறவினர்கள் வளர்த்துவருகிறார்கள். காதலன் விட்டுச் சென்ற ஏக்கத்தில் அந்தப் பெண் தீக்குளித்திருக்கலாம். அதனால்தான் உடம்பில் தழும்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அவரிடம் பேசியதை வைத்து ஓர் முடிவுக்கு வந்துள்ளோம். உறவினர்கள் யார் என்று தெரியவில்லை. இந்தப் பெண்ணிடமிருந்தும் வேறு தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சாகப்போகிறேன் என்று அவருக்குத் தெரியும். இருந்தாலும், தினமும் சாப்பிடுகிறார். மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார். என்றனர் மிகுந்த வேதனையுடன்.