சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க புதிய திட்டம் - சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

41 Views
Editor: 0

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளது என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்..

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தளர்வில்லாத முழு ஊரடங்கையொட்டி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில்நிலையம் அருகிலுள்ள சிக்னலில் காவல் குழுவினரின் வாகனத் தணிக்கைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தளர்வில்லாத முழு ஊரடங்கில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தளர்வில்லாத முழு ஊரடங்கில் 193 சோதனைச் சாவடிகளை சென்னை முழுவதும் அமைத்து கண்காணித்து வருகிறோம். 13,000 போலீசார் சென்னை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை சென்னையில் 1.18 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியதாக 1.57 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று தளர்வில்லாத ஊரடங்கில் 850 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தளர்வுகள் காரணமாக வாகனங்களைப் பறிமுதல் செய்யாமல் வழக்குகள் மட்டுமே பதியப்பட்டு எச்சரித்து அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாஞ்சா பட்டங்கள் விடுபவர்களைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து வருகிறோம். மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படும் குடோனுக்கு சீல் வைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல் விற்கப்படுவதை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். எங்கெல்லாம் விற்பனை நடக்கிறது, வாங்குபவர்கள் யார் என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.சமூக வலைதளங்களை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துங்கள். சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளது. போலிச் செய்தி பரப்புவது, போலிக் கணக்கை உருவாக்கி தவறாகப் பயன்படுத்துவது கூடாது.

சென்னை காவல்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,650ஆக உள்ளது. 1,250 பூரண குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனர். சென்னை காவல்துறைக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் முதற்கட்டமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் குடும்பத்தினருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிது" என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.

மாநிலச்செய்திகள்