`முல்லைப் பெரியாறு அணை; நீர் மட்டத்தை 130 அடியாகக் குறைக்க மனு!’ - விவசாயிகள் அதிர்ச்சி:-
பருவமழை பெய்துவரும் நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், பருவமழை கடந்த சில நாட்களாக பெய்துவரும் நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மகிழ்ச்சியில் உள்ள தேனி மாவட்ட விவசாயிகள், முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 130 அடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்றும், நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் எனவும் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோய் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “முல்லைப்பெரியாறு அணையை ஒட்டியுள்ள கேரள மாவட்டங்களில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு பெய்த மழையால், வெள்ள ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தற்போது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அணையின் நீர் மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட 2018ம் ஆண்டு, முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க, வழக்கறிஞர் ஜோய் தாக்கல் செய்ய மனுவோடு, இந்த மனுவை இணைப்பதாகவும், மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 24ம் தேதி நடக்கும் எனவும் தெரிவித்தனர். மாநில அரசு இதில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
நீர்மட்டம் 142 அடியைக் கடந்த போது மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட தருணம் - 2018
கடந்த 2018 -ம் ஆண்டு பெய்த பெருமழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணை 142.20 அடியை எட்டியது. அந்த நேரத்தில், அணை உடைந்துவிடும் அபாயம் உள்ளதாகக் கூறியும், அப்படி நடந்தால், லட்சக்கணக்காண கேரள மக்கள் இறந்துவிடுவார்கள் எனக் கூறியும், வழக்கறிஞர் ஜோய், அணையில் நீர் மட்டத்தைக் குறைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை முடிவில், அணையின் நீர் மட்டத்தை 139.9 அடியாக குறைக்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதனை அடுத்து அணையின் நீர் மட்டம் குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில், நீர்மட்டத்தை 130 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என வழக்கறிஞர் ஜோய் மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நம்மிடையே பேசிய முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள். ``நீண்ட சட்டப்போராட்டம் நடத்தியதில், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையினை பலப்படுத்திவிட்டு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் தீர்ப்பளித்தது. தீர்ப்பிற்கு பிறகு, 2018-ம் ஆண்டு முதன்முறையாக 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை. தற்போது அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் அதிக மழை பெய்துவரும் நிலையில், நீர்மட்டத்தைக் குறைக்க கேரள சதி செய்கிறது. தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி அவர்களின் சதி வேலைகளை முறியடிக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம்” என்றனர் கொதிப்போடு.