நுண் உரம் தயாரிக்கும் இயந்திர விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளர் பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
CM Order on Bhagyalakshmi Treatment : நுண் உரம் தயாரிப்பின் போது விபத்தில் சிக்கிய தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமி மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பழனிசாமி என்பவரின் மனைவி திருமதி பாக்கியலெட்சமி என்பவர் சுய உதவிக்குழுவின் மூலம் தூய்மைப் பணியாளராக திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்தில் 28.7.2020 அன்று நுண் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கை சிக்கி முற்றிலும் சிதைந்து விட்டது என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.
திருமதி பாக்கியலெட்சமி அவர்களின் வலது கை சிதைந்தது பற்றிய விவரங்கள் எனது கவனத்திற்குத் தெரிய வந்தவுடன், இவருக்கு தீவிர உயர் சிகிச்சை அளிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நான் உத்தரவிட்டேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, திருமதி பாக்கியலெட்சுமி அவர்களின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது மருத்துவ செலவு முழுவதும் அரசே ஏற்கும். மேலும் சிறப்பினமாக இவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.