ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை தேவையற்றது: மு.க.ஸ்டாலின்

42 Views
Editor: 0

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை தேவையற்றது: மு.க.ஸ்டாலின் :

 

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெற்று செல்கின்றனர்.

ஆனால், பொதுமக்கள் ஏராளமானோர் இ-பாஸ் பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், புரோக்கர்களுக்கு இ-பாஸ் எளிதாக கிடைத்து விடுகிறது. இதற்காக ரூ.2,000த்திலிருந்து ரூ.4,000 வரை புரோக்கர்கள் வசூலிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸிற்கு ஒப்புதல் அளிக்கும் நபர்களின் துணையுடன் நடக்கும் இந்த முறைகேட்டில் அவர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.

இதையடுத்து, இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இ-பாஸ் முறையை மட்டும் தொடர்ந்து நீட்டித்து, மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வருவது முழுவதும் மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல; அது அடுக்கடுக்கான எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசே ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து, இ-பாஸ் நடைமுறை கட்டாயம் இல்லை' என்று அறிவித்த பிறகு - அதிமுக அரசு மட்டும் இந்த முறையை தொடர்ந்து உள்நோக்கத்துடன் வைத்திருப்பது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவிதத்திலும் தீர்வாகாது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என்று கூறும் முதலமைச்சர் இ-பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், ருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தாலும் - இந்த அவசரங்களுக்குக் கூட விண்ணப்பிக்கும் இ-பாஸ் பலமுறை நிராகரிக்கப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை படுதோல்வி அடைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

செயற்கையான தடைகள் மூலம் பொதுமக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி, ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 


 

மாநிலச்செய்திகள்