7ம் கட்ட ஊரடங்கில் 2வது ஞாயிற்றுக்கிழமை…! தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்:
சென்னை: 7ம் கட்ட ஊரடங்கில் இன்று 2வது ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட 6ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31 உடன் முடிந்தது. ஆனாலும், பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஆக. 31 வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆகஸ்ட்டில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, இன்று 7ம் கட்ட ஊரடங்கில் 2வது ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறினால் குற்றவியல் நடைமுறை பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசியமின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சந்தேகங்களுக்கு போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையை 044-23452330, 044-23452362 அல்லது 90003130103 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.