திருப்பத்தூர்: ''வாணியம்பாடியை சேர்ந்த, பெண் கஞ்சா வியாபாரியின், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து, அரசுடமை ஆக்கப்படும்,'' என எஸ்.பி., விஜயகுமார் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 45; கடந்த, 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். சில ஆண்டாக கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்று வந்தார். கடந்த மார்ச், 31ல் கணவாய் புதூரில், அவர் வீட்டில், 135 லிட்டர் எரிசாராயம், நேதாஜி நகரிலுள்ள வீட்டில், 21 கிலோ கஞ்சா, 20 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, அவரது சொத்துக்களை, அரசுடமையாக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதுகுறித்து எஸ்.பி., விஜயகுமார் நேற்று கூறியதாவது: சட்ட விரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்து, மகேஸ்வரி சொத்து வாங்கினார். அவற்றை அரசுடமையாக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கஞ்சா பதுக்கிய வழக்கில், நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபித்தவுடன், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அவற்றை ஏலம் விட்டு மத்திய அரசு மூலம், மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.