செப்டம்பர் 30 வரை ரயில்களை இயக்க தடை விதித்து உத்தரவு?
நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை அரசு முடக்கியே வைத்துள்ளது...
பொது போக்குவரத்து இயக்கப்பட்டால் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தவே முடியாத சூழல் உருவாகும் என மருத்துவ குழுவினர் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக நாட்டில் பேருந்து, ரயில் சேவைகளுக்குத் தடை தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில், ரயில் சேவைகளை அடுத்த மாதம் இறுதி வரை இயக்க வேண்டாம் என இந்திய ரயில்வே, அனைத்து ரயில் நிலைய மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “கொரோனா ஆபத்து காரணமாக ரயில் சேவைகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இயக்கப்படாது எனக் கூறப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த உத்தரவைச் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான பயணிகள் ரயில் சேவையும் குறிப்பிட்ட தேதி வரை இயக்க அனுமதி கிடையாது” எனக் கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த ரயில் சேவை தடை என்பது சிறப்பு ரயில்களுக்குப் பொருந்தாது என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிறப்பு ரயில்கள் பெரும்பாலும் குளிர் சாதன வசதிகளைக் கொண்டவையாக இருக்கிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, இப்படி ஒரு உத்தரவு வெளியாகியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.