கொரோனா மையத்தில் இளைஞர் உயிரிழப்பு; முதியவர் உடலை வழங்கியதால் அதிர்ச்சி:
ரேவா: மத்திய பிரதேச மாநிலம் ரேவா நகரிலுள்ள அரசு கோரோனா மையத்தில் சிகிச்சையில் இருந்த 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை எரியூட்டிவிட்டு, அவருக்கு பதிலாக, 65 வயது முதியவர் உடலை மருத்துவமனை தந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராம்விஷால் குஷ்வாஹா. இவரது 22 வயது மகனுக்கு ஆக., 3ம் தேதி கடுமையான உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ரேவாவிலுள்ள சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டார். பின், அதே மருத்துவமனையில் உள்ள கொரோனா மையத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினருக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. அவரது கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்தும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தனது மகனின் நிலை குறித்து அறிய ராம்விஷால் குஷ்வாஹா போராடியுள்ளார். கடந்த 9ம் தேதி அவரது மகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிணவறையில், தனது மகனின் பெயர் எழுதப்பட்ட பையை பெற்றுக்கொண்டு வந்து, திறந்து பார்த்த போது அதில் 65 வயது முதியவரின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது, 'உரிமை கோராத உடல்களுடன் தங்கள் மகனின் உடலை உள்ளாட்சித் துறையினர் தகனம் செய்திருக்கலாம்' என, அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் ராகேஷ் படேல் சஸ்பென்ட் செய்யபட்டுள்ளார். 'மகனின் இறப்புக்கான காரணமும் தெரியவில்லை; அவனது அஸ்தியும் கிடைக்கவில்லை' என, குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.