கரூர்: `இலவச மரக்கன்றுகள்; ஒருவருடம் கழித்து பரிசு!' - மாணவர்களை ஊக்கப்படுத்தும் இளைஞர்:-
குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் நடும் மரக்கன்றுகளுக்கு, அவர்களுக்கு பிடித்த பெயரை வைக்கச் சொல்வது, காலையிலும், மாலையிலும் அவர்கள் உணவு அருந்தும்போது, அவர்களின் செல்ல மரக்கன்றுக்கும் உரம் வைத்து, தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்ய வைக்கிறோம்.
கரூர் மாவட்டம், குளித்தலையிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், 6 - ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிக் மாணவர்களுக்கு, பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தும் இளைஞரின் முயற்சி, குளித்தலைப் பகுதி சூழலியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மரக்கன்றுகளுடன் மாணவர்கள், ஆசிரியர்கள்
நா.ராஜமுருகன்
குளித்தலையைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். இவர், 'க்ரீன் பிளான்ட்' என்ற அமைப்பைத் தொடங்கி, குளித்தலைப் பகுதியின் சூழலை பசுமையாக்கிவருகிறார். ஏற்கனவே, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகளின் சார்பாக, பல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 10 - க்கு 24,000 - க்கும் அதிகமான மரக்கன்றுகளை கொடுத்து, அவர்களின் இல்லங்களில் நட்டு வளர்க்கும் பணியினை ஊக்குவித்து வந்தார். இப்போது, ஒரு மரக்கன்றை 10 ரூபாய்க்கு விற்கிறார்.
மரக்கன்றுகள்
நா.ராஜமுருகன்
ஆனால், அந்த பணம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்க ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, நண்பர்கள் சிலரை ஒருங்கிணைத்து, இந்த அமைப்பை ஏற்படுத்தி, குளித்தலைப் பகுதியில் பரந்த அளவில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாபெரும் திட்டத்தைத் துவக்கி உள்ளார். இதில், இப்போதைக்கு 6 - ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்து வளர்க்கச் சொல்கிறார்.
இதுகுறித்து, பிரேம் ஆனந்திடம் பேசினோம். "குளித்தலைப் பகுதியை பசுமையாக்கி, இங்கு சூழலை செம்மையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கடந்த 15 வருடங்களாக குறைந்த விலையில் மரக்கன்றுகளை வழங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்களை மரக்கன்றுகள் வளர்க்க ஊக்கப்படுத்தி வந்தோம். ஆனால், ஒரு மரக்கன்றை ரூ. 10 - க்கு விற்பதால், பல மாணவர்களால் காசு கொடுத்த வாங்கமுடியாத சூழல். அதனால், 6 முதல் 8 - ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, வளர்க்க ஊக்கப்படுத்துகிறோம்.
பிரேம் ஆனந்த்
நா.ராஜமுருகன்
இதற்காக, நண்பர்கள் பலரை ஒருங்கிணைத்து, 'க்ரீன் பிளான்ட்' என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறோம். மாணவர்களுக்கு வெறும் மரக்கன்றுகளை கொடுத்துவிட்டு, கடமை முடிந்தது என்று வந்துவிடாமல், ஒவ்வொரு மரக்கன்றையும் பெறும் மாணவர்களின் பெயர், முழு முகவரி, அலைபேசி எண், வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை பெற்றுகொள்கிறோம்.
அதன்மூலம், ஒவ்வொரு 10 நாள்களுக்கு ஒரு முறையும் அவர்களை தனித்தனியாக அழைத்துப் பேசி, 'இயற்கையின் நியதிப்படி ஒரு மரம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் என்ற நிலையை அடையும் வரை, அவற்றை நீருற்றி பராமரிக்க வேண்டும்' என்று அறிவுரை சொல்கிறோம். அதோடு, மாணவர்களை ஊக்குவித்து, 'நடும் அனைத்து மரக்கன்றுகளையும், மரங்களாக மாற்றுவதே நம் இலக்கு' என்பதை அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
ஹேமலதா மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும்போது...
நா.ராஜமுருகன்
குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் நடும் மரக்கன்றுகளுக்கு, அவர்களுக்கு பிடித்த பெயரை வைக்கச் சொல்வது, காலையிலும், மாலையிலும் அவர்கள் உணவு அருந்தும்போது, அவர்களின் செல்ல மரக்கன்றுக்கும் உணவு அளிப்பது(உரம் வைத்து, தண்ணீர் ஊற்றுவது), மரக்கன்றோடு பேசுவது போன்ற அனைத்துவிதமான செயல்களையும் செய்ய வைத்து, மரங்களை அவர்களின் உற்ற நண்பர்கள், மனித வாழ்க்கையின் ஆதாரம் என்று கருதும் வகையில் போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.
இதில், கலந்துகொண்டு மரக்கன்றுகள் பெற்று வளர்க்க முன்வரும் ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு வருடம் கழித்து சான்றிதழும், தகுந்த பரிசும் வழங்கப்படும். இந்தப் பணியினைச் (மரக்கன்றுகள் வைக்க) செய்ய, எங்களுக்கு இதற்காக தனது இல்லத்தின் பின்புறத்தை கொடுத்த, குளித்தலையின் பிதாமகன், சமூகப் பணிகள் செய்பவர்கள் அனைவருக்கும், எங்களை உற்சாகப்படுத்தும் அ.வா.கோபால தேசிகன் அய்யா அவர்களுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளோம்.
மரக்கன்று நடும் மாணவர்
நா.ராஜமுருகன்
இத்திட்டத்தினை, உள்ளூர் மக்கள் தங்களது என்று கையில் எடுக்கும்வரை, நிதி கொடுத்து உதவ பல நண்பர்கள் முன்வந்திருக்காங்க. இந்தத் திட்டத்தின் பொறுப்பாளராக ஹேமலதா சிவக்குமார் செயல்படுகிறாங்க. ஊர்கூடி தேர் இழுத்து, குளித்தலைப் பகுதியை பசுமையாக்குவோம்" என்றார் உறுதியாக!.