கல்வி உதவித்தொகையை இழக்கிறதா தமிழகம்?; புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பால் சிக்கல்:
புதிய கல்விக்கொள்கை என ஹிந்தி திணிப்பிற்காக உருவாக்கப்பட்டது போன்ற ஒரு எண்ணத்தை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி வருகின்றனர். அது உண்மையா, புதிய கல்விக்கொள்கையால் என்ன லாபம்...முழுமையாக விளக்குகிறார், சேலம் டைம் இன்ஸ்டிடியூட் இயக்குனர் பெரியசாமி. அவர் அளித்த பேட்டி:
கே: தமிழக மாணவர்கள் தான் அதிகளவில் உயர்கல்வி வாய்ப்பை பெறுகின்றனர். தேசிய அளவிலும் நாம் தான் முதலிடம். அப்புறம் எதற்கு புதிய கல்வி கொள்கை
அண்மையில் தான் தமிழக கல்வி முறையில் மாற்றம் வந்துள்ளது. இதுவரை 'ப்ளூ பிரிண்ட்' முறையில் தான் பாடம் நடத்தி வந்துள்ளோம். எந்த பாடத்தில் இருந்து எந்த கேள்வி வரும் என்று மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியும். அதிக மார்க் பெற வைக்கும், அதிக மாணவர்களை பட்டம் பெற வைக்கும் முறை தான். அறிவார்ந்த கல்வி முறை இல்லை. எனவே மாற்றம்வேண்டும்.
கே: இரண்டாண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட கல்வி முறையிலும் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனரே
பிளஸ் 2 வில் 93 சதவீதம், பிளஸ் 1ல் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 சதவீத மாணவர்கள் வெறும் பாஸ் மார்க் மட்டும் தான். ப்ளூ பிரிண்ட் இல்லாத கல்வி முறையில் இருந்து விடுபட்டு கொஞ்சம் புரிந்து படித்து சென்றதால் மாணவர்கள் தடுமாற ஆரம்பித்துள்ளனர். உயர்கல்விக்கு அதிகம் பேர் சென்றனர் என்று பெருமை பேசுவதை விட மாணவர்களை முன்னேற்றுவது தான் புதிய கல்வி கொள்கையில் நோக்கம்.
கே: புதிய கல்வி கொள்கை இப்போது தேவையா
நிறைய பேர் டிகிரி படித்துள்ளனர். அதனால் என்ன பயன். இன்ஜினியரிங் படித்தவர்கள் மாதம் 5000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்கின்றனர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தவர்கள் வீட்டில் பியூஸ் போனால் எலக்ட்ரிஷியனை தான் கூப்பிடுகின்றனர். இதை மாற்ற வேண்டும் என கல்வியாளர்கள் சொல்கின்றனர். அதை நாம் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
கே: தாய் மொழி கல்வியை பற்றி சரியான விளக்கம் இல்லையே
புதிய கல்வி கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து பாடங்களையும் தாய்மொழியில் படிப்பதை கட்டாயமாக்கியுள்ளனர். இது நல்ல விஷயம் தானே. தாய்மொழியில் புரிந்து படிப்பதன் மூலம் அறிவுத் திறன் வளர்கிறது என்பதை ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் நிரூபித்து கொண்டிருக்கின்றன. தாய்மொழியில் தான் சிந்திக்க முடியும். கனவுகள் கூட தாய்மொழியில் தான் வரும்.
கே: மும்மொழியை பாரமாக அரசியல்வாதிகள் நினைப்பது ஏன்
மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகள், ஒரு அன்னிய மொழி கற்றுக் கொள்ள முடியும் என்று தான் புதிய கல்வி கொள்கை சொல்கிறது. ஹிந்தி மட்டுமே படிக்க சொல்லவில்லை. மாணவர்கள் விரும்பினால் மூன்றாவதாக மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படிக்கலாம்.இருமொழி கொள்கை தான் வேண்டும் என்றால், தனியார் பள்ளிகளிலும் இருமொழி கொள்கையை தான் வைக்க வேண்டும். அங்கு மூன்றாவது ஒரு மொழி கற்றுத்தரக் கூடாது. அப்போது தான் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் சமமாக இருப்பார்கள்.
கே: ஒரு சில மாணவர்கள் படிக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிக்காக ஆசிரியர்களை நியமிக்க முடியுமா
ஒரு சில இடங்களில் கிராமமே தெலுங்கு, மலையாளம் அல்லது பிறமொழி பேசுவார்கள். அங்கு அவர்களின் தேவைக்கேற்ப மூன்றாவது மொழியை கொண்டு வரலாமே. இன்னொரு மொழி படிக்க வேண்டும் என்பதற்காக பாலிசியே வேண்டாம் என்பது தான் தவறு. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஹிந்தி ஒரு மொழியாகவே உள்ளது எல்லா மாநிலங்களிலும் மூன்று மொழி பாடத்திட்டம் உள்ளது. மாணவர்கள் தேர்ச்சி, உயர்கல்வியில் அதிக சதவீதம் அதிகம் இருந்தாலும் மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்கள் ஏன் முன்னேறவில்லை. ஐ.ஐ.டியில் சேரும் 60 சதவீத மாணவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் கேரள மாணவர்கள் அதிகம் பேர் படிக்கின்றனர். வேலை, விளையாட்டுத் துறைகளிலும் தென்மாநில மாணவர்கள் நம்மை விட அதிகளவில் உள்ளனர். இப்போதாவது நம் பலம், பலவீனத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.உடன்படாத விஷயங்களை மத்திய அரசுக்கு எழுதி அனுப்பலாம்.
கே: இதை வேண்டாம் என்பதால் நமக்கு இழப்பு ஏற்படுமா
நாட்டின் வருமானத்தில் இதுவரை 1.7 சதவீதம் தான் கல்விக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்காக 6 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு குறிப்பாக எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு உதவித் தொகை போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வியிலும் நிறைய புதிய படிப்புகள் வரும். இதை வேண்டாம் என்று சொன்னால், இதை படிக்கப் போகும் நமது மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்காது. இதனால் அரசியல்வாதிகளுக்கு இழப்பில்லை. அரசுப் பள்ளியோடு தனியார் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுவர்.
tpsaamy@gmail.com