பிரதமர் துவக்கிய விவசாய திட்டம்; தமிழகத்திற்கு ரூ.1,200 கோடி கடன்:
சென்னை: பிரதமர் துவக்கி வைத்த,விவசாய உள்கட்டமைப்புதிட்டத்தின் கீழ், நடப்பாண்டில், தமிழகத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய குழுக்களுக்கு, 'நபார்டு' மற்றும் தேசிய வங்கிகள், 1,200 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளன.
தமிழகம் உட்பட, நாடு முழுதும் உள்ள விவசாயிகள், தங்களின் விளைபொருட்களை பாதுகாக்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் சிரமப்படுகின்றனர். இதை தடுக்க, விவசாய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, சில தினங்களுக்கு முன் துவக்கி வைத்தார்.
3 சதவீத வட்டி
அத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் செயல்படும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாய பொருட்களை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட, கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, நடப்பாண்டில், 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 200 கோடி ரூபாய் வரை கடன் வழங்க உள்ளது. இதற்கு, 3 சதவீதம் வட்டி. இதுதவிர, மத்திய அரசும், வட்டி சலுகை வழங்குகிறது. இதனால், வட்டி சலுகை போக, கடனுக்கு, 1 சதவீதமே வட்டி மட்டும் செலுத்த வேண்டி வரும். மேலும், தேசிய வங்கிகளும், விவசாய குழுக்கள், சங்கங்களுக்கு கடன் வழங்க உள்ளன.
இது குறித்து, 'நபார்டு' வங்கியின் முதன்மை பொது மேலாளர், எஸ்.செல்வராஜ் கூறியதாவது: பிரதமர் துவக்கி வைத்த விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ், குளிர்பதனகிடங்கு உள்ளிட்ட, விவசாய கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுக்கு,கடன் உதவி செய்யப்படும்.விவசாய குழுக்கள், கூட்டுறவு சங்கம் போன்றவற்றிற்கு, தலா, 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
கட்டமைப்பு வசதி
நடப்பாண்டில், தமிழகத்தில், 'நபார்டு' வாயிலாக, 200 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, 150 கோடி ரூபாய் முதல், 200 கோடி ரூபாய் வரை கடன் வழங்க, மதிப்பிடப்பட்டு உள்ளது.அந்த நிதி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக, தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்படும். அவை, அந்த நிதியில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும். இதுதவிர, தேசிய வணிக வங்கிகளும், 1,000 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் வழங்க திட்டமிட்டு உள்ளன.அந்த கடனை, ஏழு ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம். தமிழகத்தில், விவசாய கட்டமைப்பு திட்டத்தின் கீழ், அடுத்த நான்கு, -ஐந்து ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாய் கடன்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.