டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் இல்லை..! மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியா இல்லை அதிர்ச்சியா??
கொரோனாவால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஏராளம், அதில் முற்றிலும் பாதிக்கப்பட்டது பள்ளி மற்றும் கல்லூரிகள். நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனிடையே பள்ளி கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அரசு வெளியிடாததால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளைத் திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மத்திய உயர் கல்வித்துறை செயலாளர் அமித் காரே, கல்லூரி இறுதி தேர்வுகள் திட்டமிட்டபடி நடப்பாண்டின் இறுதிக்குள் நடைபெறும் என்றும், மேலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளி கல்லூரிகள் வகுப்புகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், குறிப்பாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. என்னதான் மதிப்பீடு செய்திருந்தாலும் zero academic year அறிவிக்கப்படாது என உயர்கல்வி செயலாளர் அமித் காரே நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற கல்வி உயர் குழு கூட்டத்தில் கல்வி ஆண்டு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சமூக இடைவெளியுடன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலிருந்து கல்வி ஆண்டை தொடங்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டு இருந்ததாகவும், தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரி திறப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலோசனையின்படி ஊரடங்கும் முடிந்து முதற்கட்டமாக கல்லூரிகள் மற்றும் 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரை மட்டுமே தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் டிசம்பர் மாதம் வரையில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்த திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் வரையில் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பித்த அறிவுறுத்தப்பட்ட இந்த நிலையில் இறுதி அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரிகளை திறக்க மத்திய அரசு சார்பில் அறிவுரைகளை வழங்கப்பட்டாலும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பைப் பொறுத்து தான் அந்தந்த மாநில அரசுகளே பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் என மனித மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.