வெளியே வந்து வானத்தை பார்த்தா.. பெரிய வட்டம்.. சென்னையில் 22 டிகிரி அதிசயம்.. வானிலை மையம் விளக்கம்
சென்னை: சென்னையில் நேற்று வானத்தில் காணப்பட்ட பெரிய வட்டம் மக்களை கவர்ந்து இருக்கிறது. இதற்கு வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. அவ்வப்போது சூரியனை சுற்றி பெரிய பெரிய வட்டம் தோன்றுவது வழக்கம், சமயத்தில் இந்த வட்டம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் சில வட்டங்கள் அதிக மணி நேரங்கள் இருக்கும். சில வட்டம் மிகவும் வெளிச்சமாக கண்ணை கூசும் வகையில் இருக்கும். இரவு நேரத்தில் சமயங்களில் நிலவை சுற்றியும் இப்படி வட்டங்கள் காணப்படுவது வழக்கம்.
சென்னை எப்படி
இந்த நிலையில் சென்னையில் நேற்று பெரிய வட்டம் சூரியனை சுற்றி காணப்பட்டது. காலை 9 மணி அளவில் இந்த வட்டம் தோன்றியது. நாள் முழுக்க வட்டம் இருந்தது. இதை தமிழில் அகல் வட்டம் என்று கூறுவார்கள். சூரியனை சுற்றி மோதிரம் போல இந்த வட்டம் காணப்படும்.
என்ன காரணம்
இதற்கு என்ன காரணம் என்று விளக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெயில் காலத்தில் மேகங்கள் அதிக உயரத்தில் இருக்கும். மேகங்கள் உயரமாக செல்ல செல்ல அது உறைந்து பனி கட்டி போல மாறும். இந்த கட்டிகளில் சூரிய ஒளி பட்டால், உடனே அந்த ஒளி விலகல் அடைந்து சிதறும். இப்படி விலகல் அடையும் ஒளிதான் இந்த வட்டத்திற்கு மூலமாக இருக்கிறது.
ஏன் இப்படி
இதை ‘குறைந்தபட்ச ஒளி விலகல் கோணம்' என்று கூறுவார்கள். ஒளி சாதாரணமாக விலகல் அடைந்தால் இப்படி வட்டம் ஏற்படாது. 22 டிகிரி கோணத்தில் அது விலக வேண்டும். அப்போது மட்டும்தான் சூரியனை சுற்றி வட்டம் ஏற்படும். நேற்று ஒளி சரியாக 22 டிகிரி கோணத்தில் விலகி இருக்கிறது. இதன் காரணமாக நேற்று சென்னையில் வட்டம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள் .
மக்கள் பார்த்தனர்
நேற்று சென்னையில் ஏற்பட்ட இந்த சூரிய அகல் வட்டத்தை மக்கள் ஆர்வமாக வெளியே வந்து பார்த்தனர் பலர் கூட்டம் கூட்டமாக பார்த்தனர். மழை பெய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் இதுபோல் வட்டம் ஏற்படுவதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.