கட்சி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம்!: கோவை பா.ஜ.க நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
கோவை: கோவையில் சுதந்திர தினத்தன்று தங்களது கட்சியின் கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகி வெங்கடேஷ் மற்றும் தொண்டர்கள், கணபதி அருகே சுதந்திர தினவிழாவை கொண்டாடினர். அப்போது அவர்கள் தங்கள் கட்சியின் வண்ணம் பூசிய கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினர் என்பது புகாராகும். இதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பாரதிய ஜனதா கோவை மண்டல நிர்வாகி வெங்கடேஷ் உள்ளிட்டோர் மீது கணபதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது தேசிய கொடி அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இதேபோல கோவை வி.கே.கே. மேனன் சாலையில், சாலையை மறித்து சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் பாரதிய ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், பொதுச்செயலாளர் ஜி.கே. செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட 6 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை போலவே சிதம்பரம் அருகே புவனகிரி பெரியார் சிலை அருகே பா.ஜ.க. தலைவர் ராமநாதன் தலைமையில் அக்கட்சியினர் சுதந்திர தினவிழாவையொட்டி பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியதாக 10 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.