நாமக்கல்,
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு:
மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலதான் கொரோனாவை தடுக்க முடியும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14.44 கோடி மதிப்பிலான 26 திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கொரோனாவை தடுப்பதில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும்.
மக்கள் ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போதும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாளொன்றுக்கு 68 ஆயிரம் பரிசோதனை செய்தால் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
நாமக்கல் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் என்றால் மிகையில்லை. கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது. முட்டை, ஜவ்வரிசி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் மாவட்டம். நாமக்கல் லாரி தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.