மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணத்துக்குக் கட்டுப்பாடு கூடாது!- மத்திய அரசு:
மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்குள்ளேயும் பயணிக்க எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்துறை முடங்கிய நிலையில், பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, கடந்த ஜூன் 1-ம் தேதி Unlock 1, Unlock 2, Unlock 3 என்ற பெயர்களில் தளவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் Unlock 3 தளர்வுகள் அமலாகியிருக்கின்றன. இதையடுத்து, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்றவை நாடு முழுவதும் படிப்படியாகத் திறக்கப்பட்டன. அதேநேரம், கல்விக் கூடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க ஆயத்தமாகி வருகின்றன.
இந்தநிலையில், மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்கு உள்ளேயும் பொதுமக்கள் மற்றும் பொருட்களைக் கொண்டுசெல்ல எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். இதுபோல், பொதுமக்கள் மற்றும் பொருட்களைக் கொண்டுசெல்லக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பொருளாதாரரீதியிலும் வேலைவாய்ப்புரீதியிலும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர், தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதனால், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்துக்குள்ளே மக்கள் பயணம் மேற்கொள்ள அல்லது பொருட்களைக் கொண்டு செல்லத் தனியாக எந்தவித அனுமதியோ, இ-பாஸ் போன்றவையோ வாங்கவேண்டிய அவசியமில்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.
அப்படி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவதாகும் எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.