6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
சென்னை : தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.