குட்கா வழக்கு:திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு புது நோட்டீஸ் அனுப்ப உத்தரவு:
சென்னை: சட்டசபைக்குள் 'குட்கா' எடுத்து சென்ற விவகாரத்தில், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக, தி.மு.க., குற்றம் சாட்டியது. அதை நிரூபிக்கும் விதமாக, சட்டசபைக்குள் குட்காவை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து சென்றனர். இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக் குழு, 'நோட்டீஸ்' அனுப்பியது.நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' வழக்கை விசாரித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று காலை, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. 2017 ல் அனுப்பப்பட்ட நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதால், ரத்து செய்யப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்களுக்கு புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
ஸ்டாலின் வரவேற்பு
இந்த தீர்ப்பு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உயர்நீதிமன்றம் ஜனநாயகம் போற்றுகின்ற வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டசபை வரலாற்றில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுக மனதார வரவேற்கிறது. இன்றும் குட்கா தங்கு தடையின்றி விற்பனை நடந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.