வேலூர்: `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி!’ - ரௌடி ஜானியை எச்சரித்த போலீஸ்:
``வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால், `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ என அறிவிக்கப்படுவார்’’ என்று தண்டோரா போட்டு தெரிவித்திருக்கிறது வேலூர் காவல்துறை.
``வேலூர் காட்பாடியை அடுத்த வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 33 வயது ஜானிமீது ஆறு கொலை, எட்டு ஆள்கடத்தல் உட்பட 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்கவுன்ட்டர் லிஸ்ட்டிலுள்ள ஜானி பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தபடியே தன் அடியாட்கள் மூலம் காரியங்களைக் கச்சிதமாக முடிக்கிறார். வீடியோ போன்கால் மூலம் தொழிலதிபர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்துவிடுகிறார்’’ என்று விலாவாரியாகச் சுட்டிக்காட்டுகிறது வேலூர் காவல்துறை.
இந்த நிலையில்,``என் கணவரைத் தேடுகிறேன் என்று சொல்லி என்னையும் என் குழந்தையையும் சித்ரவதை செய்கிறார்கள்’’ என்று வேலூர் போலீஸுக்கு எதிராக பகீர் புகார் கிளப்பியிருந்தார் ஜானியின் மனைவி ஷாலினி. ஷாலினிக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், மதுரையில் இயங்க வரும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கமும் குரல் கொடுத்திருக்கின்றனர். போலீஸாரைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தச் சூழலில், வேலூர் மாவட்ட காவல்துறை ஜானி குறித்து பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், ``குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஜானி என்கிற ஜான் பால்ராஜ் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவருகிறார். அடுத்த மாதம் 7-ம் தேதி காட்பாடி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஜானி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஜராகத் தவறும்பட்சத்தில் `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ என அறிவிக்கப்படுவார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜானி
இது தொடர்பாக, பத்திரிகைகளிலும் காவல்துறை விளம்பரமாக வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, தண்டோரா மூலமாகவும் ரௌடி ஜானி குறித்து பொதுமக்கள் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுவருகிறது. ``வேலூரில் கத்தி கலாசாரம் பெருகிவிட்ட சூழலில், ரௌடியிசத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உண்டு. நீதிமன்றத்தில் ஜானி ஆஜராகாமல் இருந்தால், அவர்மீது கடும் நடவடிக்கை பாயும்’’ என்கிறது வேலூர் போலீஸ்.