ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா: கல்லூரி மாணவர்கள் மூலம் விற்பனை- தலைவன் உள்பட 13 பேர் கைது:
சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா கடத்தல் தலைவன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற 6 கல்லூரி மாணவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ராகுல்(22) என்பவர் ஆயிரம் விளக்கு காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பவருடைய மகன் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பிகாம் மாணவரான எழிலரசன்(22), வளசரவாக்கத்தை சேர்ந்த பிஏ ஆங்கிலம் படித்துவரும் மாணவரான பிரித்விராஜ் (22), பாண்டிச்சேரியை சேர்ந்த பொறியியல் மாணவரான உபயதுல்லா (21), கேகே நகரைச் சேர்ந்த பி.பி.ஏ மாணவரான டேவிட் பிராங்கிளின் (21), சைதாப்பேட்டையை சேர்ந்த பிரசாத்(20) என்பது தெரியவந்தது.
கஞ்சா புகைக்கும் பழக்கத்தின் மூலம் தி.நகரை சேர்ந்த விக்னேஷ்(எ) ஹரிபாபு என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கஞ்சா விற்பனையில் இவர்களை ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது.
தான் போன் செய்து கொடுக்க சொல்லும் நபர்களிடம் கஞ்சாவை விற்பனை செய்யவேண்டும் எனவும் அதனால் 18 கிலோ கஞ்சாவை பத்திரப்படுத்தி வைப்பதற்காக லாட்ஜ் எடுத்து தங்கியதாகவும் பிடிபட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதியில் அறை எடுத்து கஞ்சா விற்பனை - போலீஸ் எஸ்.ஐ மகன் உள்பட 6 மாணவர்கள் கைதுமேலும், மதுரவாயல், வளசரவாக்கம், தி.நகரில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக்கி தயாராக வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த விக்னேஷ் (எ) ஹரிபாபு மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்தபோது அவர் மதுரையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுரை சென்ற போலீசார் விக்னேஷ் (எ) ஹரிபாபுவை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த நூதாக்கி ஐசக் (24) என்பவர் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி ஹரி பாபு (எ)விக்னேஷிடம் சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு சப்ளை செய்யுமாறும் கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ஆந்திரா சென்ற போலீசார் நூதாக்கி ஐசக் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விக்னேஷ் (எ) ஹரிபாபு போன்று பல டீலர்கள் நூதாக்கி ஐசக்கிடம் வேலை செய்வதாகவும் இவர்களுக்கு ஐசக் ஆந்திராவிலிருந்து பெரிய அளவில் கஞ்சாவை வாங்கி கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அப்துல் ரசாக் (21), யுவராஜ் (22), விஜய் (22) சாய் சுதன் (21), ஹரி விக்னேஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா, இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரண்டு எடை மெஷின்கள், 9 மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் நூதாக்கி ஐசக்கிடம் சென்னையில் வேறு யாரேனும் டீலர்களாக இருந்து வருகிறார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தி.நகர் துணை ஆணையர் ஹரி ஹிரண் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்துக்கொண்டு வந்து சென்னையில் விறபனை செய்ய முயன்ற 12 நபர்கள் மற்றும் கஞ்சா விற்பனை தலைவன் நூதாக்கி ஐசக் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நூதாக்கி ஐசக் என்பவர் ஆந்திராவில் கஞ்சா வாங்கி தமிழகத்துக்கு கொடுத்து வந்துள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும், நூதாக்கி ஐசக் பற்றிய நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் இன்னும் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சென்னை காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் கல்லூரிகளில் கஞ்சா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது போல போதைபொருள் கடத்துவதை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.