நீட் தேர்வு ஒத்திவைப்பு : உள்துறை அமைச்சகம் ஆலோசனை..!
நீட் தேர்வை நடத்த நாடுமுழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேலும் ஒருமாதம் ஒத்திவைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியுமா அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா என்று கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டதாக தேசிய தேர்வு முகமை, கூறியிருந்தது.
மேலும், வெளிநாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியாது என்றும், மத்திய அரசு போதிய விமானங்களை இயக்கிவருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வு ரத்து இல்லை, திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
மேலும், தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் அளித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் மீட் மற்றும் JEE தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற நிலை உருவானதை தொடர்ந்து, நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்கனை முன்வைத்து வருகின்றனர்.
கொரோனா அச்சிறுத்தல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் சூழலில் தற்போது நீட் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், நீட் தேர்வை மேலும் ஒரு மாதம் ஒத்திவைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகமும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.