எதற்காக இபாஸ்: முதல்வர் இபிஎஸ் விளக்கம்:
சென்னை: இ பாஸ் இருப்பதால் தான் யார், யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
கடலூரில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த பிறகு முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு பரிசோதனை செய்வதால், தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.
கடலூரில் இதுவரை 8 ஆயிரத்திற்கு அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளன. கடலூரில் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவ குழுக்கள் செயல்படுகின்றன. கடலூரில் தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும விதமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரியர் பேப்பரில் பாஸ் என்ற அறிவிப்பு வாக்கு அரசியலுக்கானது இல்லை. கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும் என ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இ - பாஸ் இருப்பதால் தான் யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை தொழில்துறையினர் விவசாயிகள் பாராட்டி வருகின்றனர். தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னை தீர்க்கவே ஒவ்வொரு மாவட்டமாக சென்று அவர்களை சந்தித்து வருகிறேன். அரசு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பங்கேற்பதும், பங்கேற்காததும் அவர்களின் எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்படுத்தும் பகுதிகளுக்கு நடமாடும் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து இல்லாமல், டாக்டர்கள் சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றை குணப்படுத்துகின்றனர்.
சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை திட்டம், வீட்டு மனை திட்டம், குடிமராமத்து திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் கடலூரில் சிறப்பாக செயல்படுகிறது. கடலூரில் காய்ச்சல் முகாம் மூலம் 3.25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.