தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓடும்?- மக்கள் எதிர்பார்ப்பு...

46 Views
Editor: 0

தமிழக அரசு பொதுபோக்குவரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓடும்?- மக்கள் எதிர்பார்ப்பு:

 

தமிழக அரசு பொதுபோக்குவரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு போக்குவரத்து முடங்கியிருப்பதால் அவசர காரணங்களான மருத்துவம், மரணம், திருமணம் உள்ளிட்டவைகளுக்காக பயணம் செய்பவர்கள் தனியார் டிராவல் ஏஜென்சிகளுக்கு அதிக பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக பொதுபோக்குவரத்து கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் பல்லாயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களாக உழைப்பேதுமின்றி எட்டு மண்டலங்களில் பணிபுரியும் லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். ஊரடங்கில் மெல்ல, மெல்ல அரசு பல தளர்வுகளை படிப்படியாக கொண்டு வருவது போல பொது போக்குவரத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலும், தொழிலாளர்கள் தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கில் அரசுத்துறையின் முக்கிய அலுவலகங்கள் குறிப்பாக தலைமைச் செயலகம், காவல் துறை, சுகாதாரப்பணியாளர்கள், செவிலியர்கள், வருவாய்த் துறை, மின்சாரத்துறை, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் துறை, பால் விநியோகம், உணவு பொருள் வழங்கல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அத்தியாவசிய மக்கள் பணி என்ற பெயரில் தளர்வு தரப்பட்டுள்ளது. அதே போல தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கட்டுமான தொழில்கள் ஆகியவற்றுக்கு செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் பணியாற்றுவோர் (தலைமைச் செயலகம் தவிர்த்து) தங்கள் பணியிடங்களுக்கு செல்வது என்பது இப்போது பெரும் சவாலாகியுள்ளது.

கட்டுமானத்தொழில், சாலை உருவாக்கம், உணவகம், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்யும் உதிரி தொழிலாளர்களை முறைசாரா தொழிலாளர்கள் என்பார்கள். இவர்களுக்கு சொந்த வாகனங்கள் கிடையாது. இப்படி அன்றாடங்காய்ச்சிகளான பலர் வேலை ஆங்காங்கே இருப்பதாக தெரிய வந்த நிலையிலும் கூட சென்று பணியாற்ற செல்ல முடியாத சோகத்தில் உள்ளனர். அது போல தொழிற்சாலைகளிலும் தற்போதெல்லாம் காண்டிராக்ட் பணியாளர்களே அதிகம் உள்ளனர். இவர்களும் பணிக்கு செல்லமுடியாமல் உள்ளனர். பொதுவாக நம் நாட்டில் இது போன்ற முறைசாரா உதிரி தொழிலாளர்களே அதிகம். ஓரளவாவது பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் பட்டினியால் வாடும் தங்களின் குடும்பத்தினர் கஞ்சி குடிக்கவாவது வாய்ப்பு ஏற்பட்டு, பொருளாதார முடக்கத்தில் இருந்து தாங்கள் மேலெழுந்து வரமுடியும் என இவர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

இந்தியாவிலேயே அதிக கொரோனா தொற்றுள்ள மராட்டியத்தில் ஓரளவு பொதுபோக்குவரத்து கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. ஏனெனில், அங்கு தொழிலாளர்கள் மிக அதிகம் என்பதும் ஒரு காரணமாகும்!

அதே போல நோய்பாதிப்பு அதிகமுள்ள டெல்லியிலும் மே 19 தொடங்கி பொது போக்குவரத்து சிறிய அளவில் இயக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஓரளவு பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. குஜராத்திலும் ஜூன் மாதத்தில் இருந்து பொது போக்குவரத்து செயல்படுகிறது. மேற்குவங்கத்தில் குறிப்பிட்ட அளவில் பொது போக்குவரத்து இயக்கப்படுகிறது. உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளது. இது போல தமிழ் நாட்டிலும் பொது போக்குவரத்தை சமூக இடைவெளி, முக கவசம், சானிடைசர், ஒவ்வொரு டிரிப்பிலும் கிருமி நாசினி தெளித்தல் ஆகிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் தனி வாகனப் பயன்பாடு கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது வருங்காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும். தற்போதே இதை கண்கூடாகக் காணமுடிகிறது. போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “பெருநகரங்களில் மக்கள் பத்து கி.மீட்டருக்கு குறைவான பயணமென்றால் மட்டுமே இரு சக்கரவாகனங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு அதிகமான தூரப் பயணமென்றால் பொது போக்குவரத்தை தான் நாடுகின்றனர். ஆனால், தற்போது பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் 40 சதவீதம் இரு சக்கரவாகனங்கள் பயன்பாடு சாலைகளில் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. 20 சதவீதம் கார் மற்றும் டாக்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. மருத்துவமனை செல்லக் கூடிய நிலையில் உள்ள ஏழை, எளிய வர்க்கத்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கிடையில் ஆட்டோவை பயன்படுத்த வேண்டியவர்களாயுள்ளனர்.” என்றார். இத்துடன் வாகன திருட்டுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் ஏழை, எளிய மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சாதாரண காலங்களில் தினசரி சுமார் இரண்டு கோடி மக்கள் அரசின் 21,542 பஸ்களில் பயணித்தனர். இதன் மூலமாக தினசரி அரசுக்கு சுமார் 30 கோடி ரூபாய் வருமானம் வந்தது. இதன் மூலமாக சுமார் 1,31,000 தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 450 கோடி சம்பளப்பணம் தரப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக வருமானமில்லாத நிலையில் மாத மாதம் ஊழியர்கள் குடும்பம் வறுமையில் வாடக் கூடாதே என்பதற்காக சம்பளம் தாய்மனதுடன் தமிழக அரசால் தரப்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்து முடங்கியிருப்பதால் அவசர காரணங்களான மருத்துவம், மரணம், திருமணம் உள்ளிட்டவைகளுக்காக பயணம் செய்பவர்கள் தனியார் டிராவல் ஏஜென்சிகளுக்கு அதிக பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த வகையில் மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் தலைக்கு ரூபாய் 3,000 மற்றும் 4,000 தர வேண்டியுள்ளதாக சொல்கிறார்கள். அரசு கழக பஸ்களையே கூட சொந்த திருமண நிகழ்வு செல்வதற்கு போன்ற காரணங்களுக்காக மொத்த வாடகை செலுத்தி எடுத்து கொள்ளலாம். இது மக்களுக்கு தெரிவதில்லை.

ஆனால், தனியார் டிராவல் ஏஜென்சிகளே இப்படி அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து லாபம் சம்பாதிக்கும் போக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு பொதுபோக்குவரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.

• சீனாவிலும், கொரியாவிலும் பொது போக்குவரத்தால் கொரோனா பரவுகிறதா என்ற ஆய்வில் ஆயிரம் பேர் சோதிக்கப்பட்டதில் இரண்டு பேருக்கு மட்டுமே பரவியது தெரிய வந்தது. இதையடுத்து தான் அங்கே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

• இந்தியாவில் மொத்தம் 1,70,000 பஸ்கள் ஓடின! தினசரி முப்பது கோடி மக்கள் பயணித்தனர்.

• சர்வதேச பொதுபோக்குவரத்து அசோசியேசன் தகவல்படி, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பொது போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் நடக்கின்றன.

• குளிர் சாதன வசதி கொண்ட பஸ்கள் தற்போது உலகம் முழுமையும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஜன்னல்களும் திறக்கப்பட்ட நிலையில் காற்றோட்டமாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலச்செய்திகள்