பொதுப் போக்குவரத்து தொடங்குமா..? செப்டம்பர் முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் - நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள்...?
செப்டம்பர் முதல் தளர்த்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி
நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 உடன் முடிவடைய உள்ளது. செப்டம்பர் முதல் தேதியில் இருந்து புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை செப்டம்பர் முதல் தொடங்க வாய்ப்பு உள்ளது. எனினும், உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்ப இதில் மாற்றம் இருக்கும். மேலும், டிக்கெட் எடுப்பது முதல் ரெயில் பயணம் வரை பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பான விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தனியார் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், அமர்ந்து மது அருந்துவதற்கு அனுமதி இல்லாமல், மதுபாட்டில்களை வாங்கிச்செல்லலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் இறுதி வரை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே, நவம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாது என்று ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கல்வித்துறை இணைச்செயலர் கூறியிருந்தார். எனினும், ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்க வாய்ப்பு இருக்கிறது.
திரையரங்குகளுக்கு அடுத்த மாதமும் தடை தொடரவே வாய்ப்பு உள்ளது. சமூக இடைவெளிக்காக குறைந்த அளவிலான மக்களை படம் பார்க்க அனுமதிக்கும் போது, அதனால் திரையரங்குகளுக்கு லாபம் எதுவும் இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது
பொதுக்கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அதிகம் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அடுத்தமாத இறுதிவரை தடை விதிக்கப்படும் என தெரிகிறது.
கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநிலங்களில் பாதிப்பு நிலைமைக்கு ஏற்றவாறு பொதுப்போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இது குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். சில நாட்களில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது