சொந்த ஊருக்கு புறப்பட்டது வசந்தகுமார் எம்.பி. உடல்
வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை:
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.
பின்னர் வசந்தகுமார் உடல் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து வசந்தகுமாரின் உடலை உடனடியாக ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பியதால், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
சிறிது நேரம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு வெளியே காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து எச்.வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுபற்றி எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கூறுகையில், ‘சொந்த ஊருக்கு நேரத்துடன் செல்ல விரும்பினோம். சொந்த ஊர் செல்ல தாமதமாகி விடக்கூடாதென உடனடியாக சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது’ என்றார்.